meaning of deepavali

தற்போதைய நம்மில் பல பேர், கண்மூடித் தனமாக தீபாவளியின் உண்மை தத்துவத்தையும் உட்காரணத்தையும் உணராமல் கொண்டாடி வருகின்றனர். முன்பு கூறப்பட்ட கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த கதையையே தீபாவளியின் மூலக்காரணமாக மூளைச் சலவை செய்யப்பட்டு இருக்கிறோம்.  அந்த பழைய அரைத்த மாவைப் புறந்தள்ளிவிட்டு சற்று உள்நோக்கி சிந்தித்தோமானால் , கந்தபுராணத்தில் வரும் சூரனுக்கோ , ராமாயணத்தில் வரும் ராவணனுக்கோ, திரிபுர அசுரர்களுக்கோ, நரசிம்மர் வதைத்த இரண்யகசிபுவிற்கோ சரி பாதி அளவு கூட நரகாசுரனின் பெருமை இல்லை. நாம் அசுரர்களின் இறப்பை பெருநாளாகக் கொண்டாடுவதில்லை.  கந்த சஷ்டி அனுசரிப்பு கூட சூரனை மாய்த்த விழாவாகக் கொண்டாடப் படுவதில்லை. முருகவேளின் தர்ம பரிபாலனத்தையும், உலகைக் காக்கும் பராக்கிரமத்தையும் தீயவற்றை அகற்றும் மறக்கருனையையும் குறிக்கும் நினைவுப்பெருநாளே அது. தீபாவளியும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும் .

                        தீபாவளி  உண்மையில் மகாலட்சுமி தேவியாரின் ஜனனத் திருநாள் ஆகும். ஐப்பசி மாதம் அமாவசை தினத்தன்று அவர் தோன்றியதாகச் சாத்திரங்கள் செப்புகின்றன. நாம் தீபாவளி  கடைபிடிக்கும் சடங்குகளை ஏறிட்டொமானால் இலக்குமியார்க்கு தொடர்புடையனவே ஆகும். கூச்மாண்ட புராணமும் தேவி பாகவதமும் ஸ்ரீ தேவி தீபம், நல்லெண்ணெய், சீயக்காய், சந்தனம், புத்தாடை, நெய், நெய்யாலான தின்பண்டங்கள், கோலங்கள், இனிப்பு வகைகள் , கண்ணாடி, பொன், தூய்மையான இடங்கள், கோமியம், புதுப்பூக்கள், மகிழ்ச்சியான சூழல், பிதுர் வழிபாடு  நடக்குமிடம், சங்கு, மணி, பசு  வசிக்கிறார் என்று கூறுகின்றன.

                            தொடங்கிய கதைக்கு வருவோம், ஒரு முக்கியமானவரை வீட்டிற்கு அழைத்தோமெனில் நம் என்ன செய்வோம்?  அவருக்கு பிடித்தவாறான உடைகள், உணவு, பண்டம், சுற்றுப்புறம் முதலியவற்றால் அவரை மகிழ்விப்போம் . ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் அலைமகளை மகிழ்விக்க அதை விடப் பன்மடங்காய் செய்வோம் தானே?அதை உறுதிப் படுத்தும் வகையில் தான் தீபாவளி சமயத்தில் நாம் பின்பற்றும் எண்ணைக்குளியல் , சீயக்காய், புத்தாடை, முன்னோர் வழிபாடு,  கண்ணாடி பார்த்தல், நெய் பலகாரங்கள், இனிப்பு பண்டங்கள், பெரிய அளவிலான விருந்தோம்பல்கள்,அலங்காரங்கள், மகிழ்ச்சியான சூழல்கள் போன்ற  சடங்குகளும் இலக்குமியை மகிழ்விக்கவும், அவர் பேரருள் நம் வீட்டில் நிலைபெற்று விளங்கவும் அவருக்கு மறைமுகமாக வைக்கும் கோரிக்கை முகமாகும்.

       ஆகா, உண்மைத் தாத்பர்யத்தை விளக்கியாகி விட்டது; அனைவருக்கும் தீபாவளியின் உட்பொருள் புரிந்திருக்கும் என நம்புவோம். கண்மூடித்தனமாக சடங்குகளை பின்பற்றுவதை விடுத்து அவற்றை புரிய முற்படுவோம். இத்தீபத் திருநாளில், இலக்குமியின் அருள் அனைவருக்கும் நற்செல்வம், பெருவாழ்வு, நல்லோர்கூடல் முதலியவற்றை பெற்று உய்வோமாக.

" யா:தேவி சர்வ பூதேஷு; மாத்ரு ரூபேண சம்ஸ்திதா︱
                      நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை: நமஸ்தஸ்யை நமோ நம ︱︱."
சகல உயிர்களுக்கும் தாயாக உருவெடுத்து விளங்குபவளுக்கு வணக்கங்கள் வணக்கங்கள் பணிவான வணக்கங்கள்.

Comments