கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்துப்பா

இந்த வியத்தகு கலைஞன்
வையத்தில் மற்றவரை போல்
வயிற்றில் விதையானவன் அல்ல
வானத்தில் விதைக்கப்பட்டு
உதரத்தில் உருவேற்றப் பட்டு
உதிரத்தில் உரமேற்றப் பெற்று
உலகுக்கு வரமாகப் பிறந்தவன்

இவனது மயிர்க்கால் கூட கலைப்பித்து கொண்டதாகவே இருக்கும்.
இவனுக்கு ஒருக்காலும் மதப்பித்து முரண் கொண்டதாகவே இருக்கும்

பள்ளி படிப்பை பத்தில் முடித்தாலும்
பத்தாம்பசலித்தனம் இல்லாத
பகுத்தறிவுவாதி

ஆத்திகம் பேசி ஆளைக் கொல்வோர் மத்தியில்
நாத்திகம் பேசி நன்னெறி வளர்க்கும் பண்பாளன்

காம்பினில் பசும்பால் கறக்கும் கைகாரன்
அன்பினில் சிவத்தை சொல்லும் கைங்கர்யன்

தமிழுக்கு கிடைத்த மற்றொரு மாணிக்கம்
அதனால்தான் பாவம் அவனுக்கும் அவ்வப்போது பணவீக்கம்.
இவன் தான் கொடுத்தான் தமிழ்கலைக்கு புத்தாக்கம்
இன்றைய கலைத்துறையின் பெரும் வளர்ச்சி இவனது தாக்கம்

அகவை ஓடி கொண்டிருந்தாலும்
அயராது ஓடி கொண்டிருப்பவன்
தகவை இதுதான் என, வரும் தலைமுறைக்கு கூறி ஓடி கொண்டிருப்பவன்

நாயகன்
மகராசன்
கலைஞன்
தசாவதாரி
விச்வரூபி
சகலகலாவல்லவன்
பஞ்சதந்திரி
அவ்வை சண்முகி எனும் பன்முகி
நம்மவன் எனும் இந்தியன்
ஐயங்கார் வீட்டுச் சின்னத் தேவர்.

ஐயனே ...
தொடரட்டும் நினது கலைச்சேவை
உன்னால் அழகு மிளிர உலவட்டும் தமிழ் கலைப்பாவை
எவன் கூறினும் கழற்றாதே உன் தலைப்பாகை
நீ அயர்ந்தாயெனில் பிடித்திடும் தமிழ் கலைக்கு ரத்த சோகை .

நீ வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
நீ விரும்பாவிடினும் பின்னாளில் வானுறையும் தெய்வத்தில் வைக்கப் படுவாய்.

அப்போது நீ " இல்லை என்று நான் சொன்னதில்லையே... இருந்தால் நன்றாக என்று தானே சொன்னேன்" என்பதாகப் படுவாய்...

அதற்க்கு பழகிக் கொள்
காரணம்
நீ இழுத்து வந்த கூட்டமும் கடந்து வந்த பாதையும் கொஞ்சம் நஞ்சமல்ல
பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயனே...

Comments