எம்பெருமானிடம் ஒரு சிறு புலம்பல்
புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்னடி தொழுதல் மறவாமை வேண்டும் ;
புள்ளாய் பிறக்கினும் புங்கவா உன் பெயர் விளம்பல் மறவாமை வேண்டும் ;
நாயாய் அலையினும் நற்றவா உன்னுரு உள்ளுதல் மறவாமை வேண்டும் ;
பேயாய் உலையினும் பங்கயா உன் புகழ் பாடித் திரிதல் மறவாமை வேண்டும்
ஐந்தறம் காக்கும் ஆறருள் முகங்களை ஐந்நொடியேனும் மறவாமை வேண்டும் ;
பத்தரை காக்கும் பன்னிரு தோளும் பணமலைக் குவியினும் மறவாமை வேண்டும்
பத்து திசையும் பாய்ந்து பயக்கும் பலமிகு வேலை பணிதல் மறவாமை வேண்டும்
தகதிமி தகவென நடமிடும் மயிலினை நாட்பொழுதேனும் மறவாமை வேண்டும்
தடை பொடி பட கூவிடுஞ் சேவலை நடை தளர்ந்திடினும் மறவாமை வேண்டும்
கனிவதன் மறுவுறு சுரகுஞ்சரியாள் நனிமலர் பாதங்கள் மறவாமை வேண்டும்
அணுகிடும் அடியவர் துயர் களை சாமளை குறமகள் திருவருள் மறவாமை வேண்டும்
அவனியை தலையினில் அடக்கிய படியே அவனடி அடங்கும் அரவினை மறவாமை வேண்டும்
அகிலத்தில் அவன் புகழ் அகலத்தை பரப்பிட்ட அருணகிரிநாதரை மறவாமை வேண்டும்
அரனவன் நடனத்தில் அயிலவன் எடுத்திட்டு அகத்தியன் தொகுத்திட்ட தமிழினை மறவாமை வேண்டும்
இனிமேல் பிறக்கினும் இனி பிறப்பிலை எனினும் இவ்வேண்டுதல் மறவாமை வேண்டும் .
முருகா... வேல் காக்க...
Comments
Post a Comment