எனக்காக நான்

சென்ற  ஆண்டு ,

விளைச்சல் கொஞ்சம் குறைவுதான்
உளைச்சலால் கொஞ்சம் மனத்தளர்வுதான்
அலைச்சலால் கொஞ்சம் உடலயர்வுதான்
சளைத்துவிடாதே மனமே உன் துணையெனறும் உன் துணிவுதான்

காயங்களுக்கு தாய்ப்பாசத்தை மருந்தாகக் கொள்
சோகங்களை சகோதரங்களைக் கொண்டு வெல்
துரோகங்களை நட்பதிகாரம் கொண்டு கொல்
துன்பத் தருணங்களில் தெய்வத்தை துணையாக கொள்

உன் வலிகளை வழியாக்க உனக்கு மட்டுமே தெரியும்
உன் உடலின் ஊக்கசக்தி உன் உள்ளத்திடம் மட்டுமே உண்டு
சிறகுகள் வலிக்கும் , பறப்பதை நிறுத்தாதே
ஓய்வெடுத்து மறுபடியும் சிறகை விரி

உனக்கு நீ வரையறுப்பதுதான் உன் நிலம்
உனக்கு நீ சுவாசித்துக் கொள்வதுதான் உன் காற்று
நீ தொடும் தூரத்தில் தான் உன் வானம்
உன் வேட்கையும் வேகமும் உன் வேள்வி நெருப்பு
உன் வேர்வை நீ நீர்த்துவிடாமல் இருக்கும் நீர்

ஊர் பேசட்டும் ; உள்வாங்கி விடாதே ஓடி கொண்டிரு
எதிர்காற்று வீசட்டும், பின்வாங்கி விடாதே ஆசுவாச படுத்திக் கொள்
பிறர் கண் கூசட்டும்; கலங்கி விடாதே பதுங்கி பிறகு பாய்

முளைக்கவில்லையா நிலத்தை மாற்று
கிளைக்கவில்லையா விதையை மாற்று
பழுக்கவில்லையா உரத்தை மாற்று
செழிக்கவில்லையா நீர்வரத்தை மாற்று
நடவை மட்டும் தடவை பல ஆனாலும் மாற்றி விடாதே

மற்றவர் கண்ணுக்கு வேண்டுமானால்
நீ முற்றுப்புள்ளி
ஆனால் உனக்கு நீதான் ஆயுத எழுத்து
உன் புள்ளிகளை ஊதி பிரபஞ்சமாக்கு

நீ வீரன்
இல்லையென்றால்
அணுவாக இருக்கும்போதே
நான்கு கோடி விந்துகளை வென்று உயிர்த்திருக்க மாட்டாய்

உனக்கானது உன்னிடம் வந்து சேரும்
தாமதமானால் காத்திரு
தப்பினால் துரத்தி பிடி

ஞாபகம் இருக்கட்டும்
நீ வீரன்

Comments