மாயோன்

நின்னை நான் பாடியதில்லை
நின்திருவடி நான் தொழுததில்லை
மண்ணைத் தின்றவனை மனதில் வைத்ததில்லை
வெண்ணைத் திருடியை வணங்கியதில்லை

உள்ளத்தில் ஒரு கீற்றொளி மின்னலாய்
எமதாய்தான் எழுத ஊக்கியிருப்பாள் என்னுளாய்
சீதையையும் சிலையையும் கைப்பிடித்த அண்ணலாய்
தோன்றிய அண்ணனைப் பாடுதி  என்பளாய்

பன்னிருகரத் தெம்தெய்வத்தின் மாமனே
பன்னிரு ஆழ்வார்தம் உளங்கவர் மாயனே
என்னிரு கரம் கூப்பி தொழவில்லை எனினும்
நண்ணி எழுதுவேன் நின்  பத்துப்பிறப்பை

உச்சமாய் உலகாண்ட அரையன் தனக்கு
பட்சமாய் அருள வேண்டி ஊழியின் போது
துச்சமாக சிறுவடிவில் தோன்றி பின் வானளவு  வளர்ந்த
மச்சமே, மாலே, மண்ணுண்ணியே போற்றி

மந்தர மலையைக் கொண்டு பாற்கடலைக் கடைய
அந்தரம் நின்ற மலை அடிகொளாது ஆடிச் சாய
இந்திர முதற்தேவர் குய்யோ முறையோ யென  வேண்ட
சுந்தர வடிவுடையோய் ஆமையானாய் ,அழகா, அபயா  போற்றி

நன்றியறியா அரக்கர்கள் வேதத்தை கடலுக்குள் ஒளிக்க
குன்றிய தேஜஸுடன் தேவர்குழாம் பிதற்றி புலம்ப
பன்றி வடிவெடுத்து அரக்கனை கொன்று காத்த குறை
யொன்றிலாத தேவே, திருவின் பதியே , திருப்பதி பதியே போற்றி

யாராயினும் தன்பெயரே மந்திரம் எனஉணர்ந்து
கூறாவிடின் கொன்றொழித்த அசுரன் பிள்ளையே
நாராயண நாமம் சொன்னதனால் அவனையும் அவனியும் காக்க
வாரா வகை வந்துதித்த நரசிம்மமே நீலனே, மாலனே   போற்றி

அரிமாவாய் அரக்கனை கொன்றவன் பேரனைச்
திரிதூண்டிய எலியாய் இருந்த பேரரசன் மாவலியை
திரிதண்டி வாமனனாய் சென்று ஐயம் கேட்டு உலகளந்த
திரிவிக்கிரமா, திருத்துழாய் மார்பா, திருமகள் கணவா போற்றி

அரசகுல ஆண்மக்கள் அனைவரையும் குலைகுலையாய்
முரசறைந்து போர்புரிந்து கொன்று தீர்த்தொழித்த
பரசத்தை ஏந்திவரும் முனிமிகுந்த முனிபுங்கவ தேவே
பரசக்தி நாயகியின் முன் பிறந்த மன்னவா , மதுசூதனா போற்றி

பத்து திக்கும்  கதறியழ பெருங்கோடுங்கோல் அசுரர் கோமான்
பத்து தலை ராவணனின் பிழையாட்சி தன்னை முறிக்க
பத்து ரதன் மகனாகி பரதனுக்கு தமையனுமாய் பத்தினிக்கு பதியாகி
பத்த அனுமன் துதிகூறும் ராகவா, ஜானகி நாயகா போற்றி

கம்பன் தமிழுக்கு எழுபது பாவில் கட்டியம் கூறிய ஏரை
உம்பர் நாயகன் , உலகளந்த பெறுமானம் கண்ணனுக்கு
நம்பராய்  நல்தமயனாய்  நலம்தரு தளபதியாய் நற்றவனாய்
தும்போடு தாங்கி நின்ற ப
லராமா பக்தவத்சலா போற்றி

வெண்ணெய் திருடினாய் பிறகு நீயே பொன்னை பொருளை ஈந்தாய்
மண்ணைத் தின்றாய் பிறகு நீயே ஒரு பருக்கை சோறில் திருப்தி கொண்டாய்
பெண்ணைக் கவரச் சேலை திருடினாய் பிறகு பெண்ணைக் காக்க சேலை ஆயிரம் ஈந்தாய்
கண்ணனே, கறுப்பழகனே, கார்மேகவண்ணனே , குழலூதும் மன்னனே போற்றி

பல்கி வரும் பாவங்கள் சூழ் இவ்வுலகை ஓரவும் நல்லவை
ஒல்கி நன்மையே செயும் ஆன்றோர் அடியார் வாழவும்
நல்கி நலங்கள் பெற வரமும் தந்து தீமை சாய்க்கும்
கல்கி உருவெடுத்த கண்கவர் தெய்வமே கண்ணனே போற்றி


ஆனை அலறியதும் காத்திட்ட  ஆதிமூல அண்ணலே போற்றி
தேனனைய திருப்பாவை ஆண்டாள் திருநாயகா போற்றி
கோன்திருமங்கை யாழ்வாரை ஆட்கொண்ட அழகிய மணவாளா போற்றி
மானான சீதேவிக்கு மாவள்ளியை ஈந்த முனிபுங்கவா போற்றி


எதோ எமக்குள் தோன்றியதை எந்தமிழால் நானும்
தோதாய் எழுதி வைத்தேன் நின் வணக்கமாய் அண்ணலே
தூதாய் பாண்டவர்க்கு சென்றவனே எமை காரும் ஐயா
தீதாய் ஒரு தடையும், புரட்டும் வாராமலே எனைத் தேடி










Comments