தமிழ்

தமிழ்...
தாய்த் தமிழ்..
தன்னலம் கருதாமல்
மண்ணாண்ட வேந்தர்களும்,
நன்னிலம் தழைத்தோங்க
பக்திசெய் மாந்தர்களும்,
பண்ணிலும் புதுமைசெய்
இனியசொல் லேந்தர்களும்,
கொஞ்சமும் வழுவாமல்
இம்மியும் பிசகாமல்
போற்றி வந்த மொழி இது..

நாகரிகம் தழைத்தோங்கிய
நாட்டில்
நாற்புறமும் மூன்றாய்
பிரிந்து
முரசு கொட்டிய
முழுமையான
பழமை அது...

இன்று...
சம்பந்தருக்காக நீரில் எதிர்நீச்சல் போட்ட தமிழ்
தமிழர் வாயில் நுழையவே தள்ளாடுகிறது
புனல்வாதத்தில் நெருப்பையே வென்ற
தமிழ்
புல்லுருவிகள் இலங்கையில் வைத்த
நெருப்பில்
பொறிகலங்கி புஸ்வாணமாகி நிற்கிறது
சென்ற உயிரை அப்பரின் பாட்டால்
வென்று மீட்ட தமிழ்
செல்லாக்காசாகி செல்லரித்து போகிறது..

திறவாக் கதவுகளைத் திறந்த
எம்மிறவா தமிழுக்கு
அரிவாட்களும் அடைப்பட்ட
கதவுகளுமே வரவேற்பு...

இறையனாரை இறங்கி வந்து வாதிட
வைத்த தமிழ்
இரைப்பையை நிறைப்பதற்குக்
கூட நிலைகுத்தி நிற்கிறது.

இனி...
நிலை மாற வேண்டும், நம்
நிறம் மாற வேண்டும்...
தரம் மாற வேண்டும், நம்
தடம் மாற வேண்டும்...

தான் தாய்ப்பால்
குடித்து வளரவில்லை -
என்பதை விட அவமானம்
தனக்கு தமிழ்
தெரியவில்லை என்பது
என்று தன்மானம் உள்ளத்
தமிழன் உணர வேண்டும்!!!

ஊருக்கு இளைத்ததில்லை எம்மொழி -
என்றும் உலகோருக்கு பாடம்
கொடுப்பது இச்செம்மொழி...

சிலை வைக்க வேண்டாம்,
கட்டடக் கலை வைக்க வேண்டாம்
குலை குலையாய் ஆயிரம்
தலை வைக்க வேண்டாம்

பிழை செய்யாது ஒவ்வொரு தமிழனும்
தமிழ் கற்றால்
தழைத்தோங்குவது தமிழ்
மட்டுமல்ல தரணியும்
தான்.

இனி தரணி வாழ, என் தாய்
வாழ, - அவள்
கொடுத்த பால் வாழ,
எம்மக்கள் வாழ
உனக்குள் ஒரு விதையாய்
முளைத்தெழுகிறேன் - நீ
மறுபடியும்
பொங்கு தமிழே,

Comments