மூவிரு முகங்கள் போற்றி

பொற்புடை சூரனும் மாயையும் காய்ந்திடும்
அற்புதஞ் செய்திடும் அயிலது ஏந்திடும்
கற்புடை மாதர்தம் கயிறுயிர் காத்திடும்
வெற்புடை நாதனின் ஒரு முகம் அன்ன

கொடியவர் வலிமைகொள் பிடியினில் கதறிடும்
அடியவர் அழுதிடின் அவன் பெயர் கழறிடின்
நொடியினில் அவரிடர் கடிதினில் முறைசெயும்
நெடியவன் மருகனின் ஒரு முகம் அன்ன

கொற்றவன் பாண்டியன் நற்றறம் புரந்திடும்
சொற்றமிழ் பலகைகண் கற்றரும் புலவர்சூழ்
கொற்றவையா ளொடுஞ் சிற்சபையானொடும்
உற்றது ஆய்ந்திடும் ஒரு முகம் அன்ன

கூடன்மா நகரின்கண் நித்த விநோதஞ்செய்
ஆடல்வல்லான் பிறைசூடும் நல்லானினும்
ஆடவல்லான் இந்த மேடமுள்ளான் - அதை
பாடவல்லாரில்லா ஒரு முகம் அன்ன

சோதியென்றானவன் ஆதியில்  ஈன்றநல்
போதிய நான்மறை ஓம்பிடும் வேள்விகள்
வேதியரோடு இம்மேதினியாருக்கும்
நாதியனாய் வரும் ஒரு முகம் அன்ன

தேடரும் முடியினன் காடுறுங் குறுமுனி
நாடொறுந் திருப்புகழ் ஓதிய நாதனும்
மூடரும் மூங்கரும் ஏனைய மாந்தரும்
ஈடுறுஞ் ஞானஞ்சொல் ஒரு முகம் அன்ன

நல்லிரு மூன்றென தோன்றிய முகங்களை
சொல்லினன் நாயனுஞ் சொற்றமிழடைவினில்
வள்ளியின் நாயகன் புள்ளினில் ஊர்பவன்
உள்ளியதன்னவன் திருவருள் தானே






**** முருகனின்  ஆறு முகங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டென்பர். 
மாங்கல்யம் காப்பாற்றும் ஒரு முகம்
அடியவர் குறை தீர்க்கும் ஒரு முகம்
தமிழ் தந்திடும் ஒரு முகம்
திருவிளையாடல் செய்திடும் ஒரு முகம்
வேதங்களை வேள்விகளை காக்கும் ஒரு முகம்
ஞானம் அருளிடும் ஒரு முகம்
அதை என் சொற்ப தமிழில் எழுத வந்தது... இல்லை... அவன எழுத தந்தது *****

Comments