தாயின்றி வெறுமை


ரோஜா இல்லாத முட்ச்செடி
நீரில்லாத தாமரை
வாசனையில்லாத மல்லிகை
தாயின்றி வெறுமை


மரமில்லா வண்டல் மண்
மழையில்லா வயல்வரப்பு
மலையில்லா நீரோடை
மதிப்பில்லா நாணயங்கள் தாயின்றி வெறுமை


வேலையில் பிரச்சினை
உணவுக்கும் நேரமில்லை
மனதுக்கும் வீரமில்லை
தாயின்றி வெறுமை

குலம் காக்கும் சாமி எல்லையில் நின்றாலும்
கும்பிடக் கோயில் பல இருந்தாலும்
குடியிருந்த கோயில் மட்டுமே கேட்கும் கேள்வி
" சாப்டியாடா?"
தாயின்றி வெறுமை

காதலி விட்டு சென்ற பின்னும்
காசு பணம் கைவிட்டு போன பின்னும்
கூட்டாளி குழி பறித்து கவிழ்த்த பின்னும்
கூடாது இவன் என்று பிறர் ஒதுக்கிய பின்னும்
கொடுக்காமல் கூசி நாம் நிற்கும் போதும்
" எளச்சிட்டியேடா " என்று கேட்ப்பாளே
தாயின்றி வெறுமை


மடிமேல்மாடி வைத்து மாளிகை கட்டி
முஸ்டாங்கும் மெர்சிடீஸுமாய் வண்டி வாங்கி
மனைவியும் மக்களுமாய் வாழ்ந்திருந்தும்
முகம் மோந்து முத்தமிட ஆளில்லையே
தாயின்றி வெறுமை

தாங்கியவள்  தன்  பக்கம் இல்லையானாலும்
முட்டிப் பால் குடித்த முலை மண்மூடி போனாலும்
தொட்டில் ஆட்டிய கை வெந்து நீரானாலும்
வட்டில் வைத்து சோறூட்டியவள் சுவர்க்கம் போய்  சேர்ந்தாலும்

இல்லை என்றாகாது அவள் பாலில் கலந்த வீரம்
இல்லை என்றாகா து அவள் சோறில் கலந்த பாசம்
இல்லை என்றாகாது  அவள் சொல்லில் கலந்த பரிவு
இல்லை என்றாகாது அவள் அணைப்பில் கொடுத்த துணிவு

இருக்கும் போதே தெய்வம் ஆனவள் - இப்பொழுது
தெய்வம் ஆகவே இருந்து போனவள்

அசந்து தலை சாய்கையில் அமைதியாய் இரு
அவள் கை  உன்னை காற்றுருவில் வருடிப் போகும்
அழுகையில் கொஞ்சம் அண்ணாந்து பார்
வானத்தில் அவள் சாயல் வடிவம் தெரியும்

அவள் வானம் ஏறியதே உன்னை
உயரே நின்று பார்க்கத்தான்
அவளை விட உயர்ந்து விட்டால்
அவள் எப்படி உச்சி மோர்வாள் ?

சிங்கங்களை பெற்றவள் சீக்கிரமாய் சோர்வாளா ?
சீக்கிரம் திரும்பத்தான் சிலதூரம் சென்றிருப்பாள்
சின்ன உருவெடுத்த சீக்கிரமே அவள் வருவாள்
நல்ல பெயரெடுத்து அவளுக்கு நீ வழிகாட்டு









Comments