குமர கோட்டம்

குமர கோட்டம்
அங்காள்வது குமரன் கொற்றம்
அங்குதான் அடங்கியது அயனின் கொட்டம்
ஆணவம் அதிகரித்தால் தலையிலும் கொட்டும்
அன்பரை அரவணைத்து அருள் மழையும் கொட்டும்
இக்கவின்மிகு குமரக்கோட்டம்
என்னைய்யன் புகழைத் திக்கெட்டும்
தெவிட்டாது முரசு கொட்டும்

படைக்கும் கடவுளுக்கு நான்கு தலை
அந்நான்கும் ஆணவத்தால் ஆனது வீங்குதலை
நாளுக்குநாள் அத்திமிர் ஓங்குதலை - கண்டு
பாம்பில் தூங்குபவனும் விடுத்தான் தூங்குதலை

ஒருநாள்
இரண்டு கணக்கையும் சொல்ல
மூன்று கண் முதலை நோக்கி
நான்குதலை இறுமாந்து சென்றது - அருகிருந்த
ஐங்கரத்தையும் கண்டு கொள்ளவில்லை
அறுமுகத்தையும் சட்டை செய்ய வில்லை
ஏழுலகும் நமை வணங்கி எந்தையை பார்க்க செல்லும் போது - இந்த
எட்டுகண் மட்டும் குருடானது ஏனோ
ஒன்பதில் எட்டாவது ஏழரையை கூட்டிவிட்டது போலும் பிரம்மனுக்கு
பத்து திக்கும் அதிர எழுந்தது கந்தவேள் - பத்தோடு
பதினொன்றா நான் என மருகி வெகுண்டு
பன்னிரு கையையும் பிசைந்தது.

முடிந்து வந்தான் கலையரசியின் பர்த்தன்
தடுத்து நிறுத்தினான் என்னையாளும் கர்த்தன்
அயிலரசின் அனல்பார்வையில் பிரம்மன் வேர்த்தன்
தன் கொழுப்பால் வந்த நிலைமையை எண்ணி தன்னையே தூர்த்தன்

கேட்டனன் கந்தன் பிரணவத்தின் அர்த்தம் - இவன்
கொடுத்த பதிலோ அனர்த்தத்திலும் அனர்த்தம் - வெகுண்டு
வேலன் கொட்டிய கொட்டில் கலங்கியது அவன் சித்தம்
அப்போதே அயனுக்கு தெளிந்தது ஆணவம் எனும் பித்தம்

அண்ணலின் ஆணைப்படி வீரபாகு அயனை அனுப்பினார் சிறை
மும்மூர்த்திகளில் முதல்வன் சிறைசெல்வது அதுவே முதன்முறை
தன ஆணவத்தின் காரணமாய் அறுமுகனுக்கு அவன் செலுத்திய திறை
மனதுக்குள் அழுது கூவினான் அரனிடம் குய்யோமுறை

கடலை வீடாகக் கொண்டவனும்
சுடலைப் பொடிபூசி ஆடுபவனும்
விடலை அறுமுகனைத் தேடிவந்தனர் - சிறை
விடலை அயனை முருகன்; அவர்கள் நொந்தனர்

படைப்பவனுக்கு பொருள் தெரிய வில்லை என்றால்
அடைப்பதா அவனைச் சிறையில்? -  இப்போது
துடைப்பதார் அக்கறையை என கோபத்தில் மூக்கு
விடைப்பதாய் விளித்தது விடையேறும் செஞ்சடை

முறுக்கு முழுதாக வரவேண்டும் என்றால் சரியாக இருக்க வேண்டும் அச்சு
அக்தில்லையேல் அம்முறுக்கைப் பார்த்து வீணாய்க் கொட்ட வேண்டும் உச்சு
அப்படி ஆகக்கூடாது என்பதால்தான் இப்படி ஆச்சு - தேவை இல்லாமல்
ஏனிதற்க்கு இப்படி ஒரு வேண்டாத பேச்சு


இப்படி ஆரம்பித்தது அந்த காரசார விவாதம் 
இதனால் சிவத்துக்கே கிடைத்தது பிரணவ போதம்
பெரும்பெருமை பெற்றன இருக்கு முதலான நால்வேதம் - சிவமே
சீடன் ஆனதால் அறுமுகம் ஆனது சுவாமிநாதம்

சுவாமிமலை பிரணவ போதத்துக்கு அந்தம்
குமரகோட்டம் ஆனது அதன் ஆதிக்குச் சொந்தம்
ஆதியும் அந்தமுமான சுப்ரமணிய ஸ்கந்தம்
குமரகோட்டத்தில் நடத்தியது படைப்பு தொழில் ஆற்றும் பிரபந்தம்


அழகாய் அமைதியாய் அமர்ந்திருக்கிறான் குமரகோட்டத்தான்
அடிபணிந்ததும் அருள்மழை பொழிந்தான் அழகு வள்ளியின் அத்தான்
அள்ளி அள்ளி வழங்குவதையே வேலையாகக் கொண்ட பன்னிரு கரத்தான்
கோடையிலும் கொண்டால்வதிலும் என்றுமே அவன்தான் முதல்தரத்தான்

முழுமையாய் முடிந்தது  எங்கள் யாத்திரை - என்னப்பன்
அருளால் குறை என்ற சொல் கூடக் கூட இல்லை ஒரு மாத்திரை
காஞ்சியிலிருந்து வெளியேறிய சமயம் என்னையும் அறியாமல் என் கண்ணில் நீர்த்திரை
இறுதியாக வழியனுப்பியதோ பெயர்தெரியா கோவிலில் அமர்ந்திருந்த கூத்திறை








Comments