யாத்திரை முதல் நாள் ...

என் இருப்பிடத்திற்கு எதிர்புறம் உள்ள காளியம்மன் கோயிலில் வருடாந்திரத் திருவிழா. என் தத்து தமக்கையார் செல்வியும் தத்து தம்பி மோகனும் வந்து அவர்களுடன் இருந்து பூஜை  செல்லுமாறு கூறினர். ( மோகனுக்கு கருப்புசாமி இறங்குவார்) . எனது புறப்பாடு 3.20 மதியத்துக்குத்தான் என்பதால் நானும் சம்மதித்து காலை 8.00 மணிக்கு அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். தம்பியின் பால்குட நேர்த்திக்கடனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தபின் தம்பிக்கு அருள் வந்தது. அருகில் கூப்பிட்ட கருப்பர்,  உள்ள பூக்களை உதிர்த்து என் மேல் தூவி ஆசிர்வாதம் செய்தார். நல்லமுறையில் யாத்திரையை முடிப்பேன் என்று கட்டியம் கூறினார். சிரித்தேன். அவர் என்னை பார்த்து சிரித்து " உன் சாமியைத் தேடி போகிறாய்... போ.. முதலில் என்னை பார்ப்பாய்.. ". மறுபடியும் சிரித்தேன். இந்த தடவை சிரித்ததற்கு காரணம் , எல்லாருக்கும் தெரிந்த விஷயம் திருச்செந்தூரில் என் அப்பனை பார்க்காமல் எங்கும் போக மாட்டேன் என்று. இந்த முறை அவர் கொஞ்சம் பெரிதாய் சிரித்தார்.. " போ அப்பா! உனக்கே தெரியும். "

நானும் நடந்து முடிந்து, பிறகு அரக்க பறக்க விமான நிலையத்திற்கு கிளம்பினேன். சரியாக ஒரு மணி நேரம் முன்பு போய் சேர்ந்தேன். நேரே கடப்பிதழ்  சாவடியை நோக்கி நடந்தேன். கடப்பிதழ் தனியங்கியில் எனது கடப்பிதழை பரிசீலிக்கும் பொருட்டு வைத்தேன். இரண்டு முறை மறுப்பு சொல்லியது. சற்றே கலங்கிய அடிவயிறுடன் " என்னடா முருகா செய்கிறாய் " என்றவாறே அதிகாரியிடம் சென்றேன். அவர் சிரித்தவாறு புதிதாகக் கொடுக்கப் பட்டுள்ள கடைப்பிதழ்களைப் பழைய தானியங்கிகள் படிக்க இயலாது என்று கூறி என் வயிற்றில் பாலை வார்த்தார். எப்பொழுதும் போல விமானத்தில் ஏறியதும் தூங்கிப் போனேன்.

திருச்சி வந்ததாக வானொலி எழ விழிப்பு வந்தது. ....




Comments