திருச்செந்தூர்
அந்தமாதி இரண்டும் ஆன என்னப்பன்
கந்தமா தனம் எனும் செந்தூரில் நிற்கிறான்
வந்தமா சனம் அத்தனைக்கும் வஞ்சமில்லாமல்
மந்தமா ருதமாய் அருள்காற்றை வீசுகிறான்
தலை மயிரை சிரைத்த கையோடு -நான்
அலை நுரைக்கும் கடலுக்குள் முங்கினேன்
மலை உறையும் மாதேவன் கோபுரத்தை வணங்கினேன்
தலை தாழ்த்தி நடக்கத் துவங்கினேன்
சந்தனக் காப்பிட்டிருந்தான் என்னப்பன்
வந்தனம் பல வாங்கிய வண்ணம்
தந்தனம் பாடியது என்னுள்ளம் அவனுக்கு
என்தனம் என்னுயிர் எப்போதும் அவனுக்கு
செயந்தி புரத்து சிங்காதனத்து வள்ளலே
வியந்தி ருக்கும் இப்பிள்ளையை பார்
நயந்தி ருக்கும் உன்னருளை இறையே இர
பயந்தி ருக்கும் இவ்வுயிர்க்கு புத்துணர்வை ஈ
வானானவனே
வானாளும் கோமான் மருமானானவனே
மானான மாலானவன் மனையாள் மகளுக்கு ஆணானவனே
மாநாண மாவேலை மாவேகமாய் விட்ட தானானவனே - இந்த
வீணானவன் வீழாமலே வாநாளுமே காக்கும் கோனானவனே
யான் வீழ்ந்தது உன் பால்
யான் வீழாதது உன்னால்
யான் விழுந்தது உன்னால்
யான் விழிப்பதும் உன்னால்
வையம் தொழும் கந்த மாதனத்து இறையை
பையத் தொழுது கண்கள் பணிக்க எழுந்தேன் நான்
செய்யும் காரியம் யாவையும் அவனுக்கே தலைப்பட்டேன்
மெய்யும் என் உய்வும் அவன்தான் எனக்கு

Comments
Post a Comment