பத்துமலை புகழாரம்

எம் மலேசியத் திருநாடு -
இம்மலைநாட்டின் பிரதான படைவீடு

பத்துமலை
முருகனின் சொத்து மலை
கடல் தாண்டியும் கண்டம் தாண்டியும்
தமிழன் வந்தாலும் - அவன்
விடாது கொணர்ந்தது பக்தியலை
அந்த பக்தியின் வித்து பத்துமலை

மனிதரும் தேவரும் மாயை அறுத்த
முனிவரும் முன்னோரும் காணா
பனிதரும் மதியும் நதியும் அணிந்த
புனிதரும்,
மாட்சியால் அண்டம் ஆளும்
மீனாட்சியாள் கோலம் கொண்ட
ஆதிபரம்பொருள் அன்னையும்
அப்பம் அவல் அதிரசங்களைக்
கப்பும் கசமுகமும் - ஒற்றை
மருப்புடை பெரும்பாரக் குழந்தையும்
அரக்கருள் அமரன் ஆன இடும்பனும்
இரக்கமே உருவும் ஆனா வள்ளியும்
பறக்கும் யானை புதல்வியும் - கூட
இருக்குமாறு தனக்கேதுவாய்
குடும்பமாய் குடியேறிய மலை

ஒண்டிக் குடித்தனம் செய்ய
மாமன் வந்தாலும் ,
மாமனுக்கு சேவை செய்ய
ராமகானன் வந்தாலும்
போமென விரட்டாது
போதும் போதும் என போக்கிடம் கொடுத்த மலை
பட்டைக்கும்  நாமத்துக்கும் பாலம் ஆன மலை
பாலன் முருகேசன் வாழும் மலை


வெல் -
அதற்க்கு கால் முளைத்தால் வேல்
வேல் வெல்ல வையகத்தில் வேறுண்டோ ஆள்?
கால்தூக்கி ஆடுபவனும்
கால்தூக்கி அளந்தவனும்
காலங்கள் படைப்பவனும் - இனி
மேல்கொண்டு சொல்லத் தகுமோ அதன் மால்?


பத்தர் பரவும் பத்துமலையில்
வேலுக்குண்டு தனிச்சந்நிதி - அது
வருவோர்க்கெல்லாம் உவட்டாது
இன்னும் உண்ணுதி உண்ணுதி
என வாரிவழங்கும் நன்னிதி

அவ்வேலாம் படைக்கு முன் - ஏதொரு
மேலாம் படை ? - எப்பேர்ப்பட்ட
நாலாம் படையும் அஞ்சாம்படையும் - அதன்முன்
நூலாம்படை

எம்பெருமானின் ஏழாம் சிரம்
பழவினைகள் அறுக்கும் அரம்
படத்திற்கு நிழல் தரும் மரம்
நல்லவர்களுக்கு அது போடும் உரம்
பகைவர்களை வேரோடு அறும்
தாலிக்கொரு வேலியாய் வரும்
இடுக்கண்வினைகளை களையுறும்
வேண்டியன எல்லாம் தரும்

இவ்வரிய வேலை
பாடிப் பணியும்  வேலை - போல்
பெருமை கொண்டதுண்டா வேறு வேலை?
அங்ஙனம் பணிவோரைச் சாய்க்க - யமன்
துணிந்து வைப்பானா காலை ?

பத்து மலை
சிவத்தின் வித்து மலை
பத்தரின் வினையை பத்தும் மலை
பகையையும் பேயையும் சீறிக் கொத்தும் மலை
வேல் வேல் என வேற்றுவரும் கத்தும் மலை
சித்தர்களைக் தனக்குள் கட்டு வித்த மலை

சொல்லுவக்கும் திருக்குறளை - உலகில்
உள்ளவர்க்குப் பறைசாற்ற
வள்ளுவர் கோட்டம் எனும்
வல்லபம் கொண்ட மலை

பத்துதலை பேயனைக்  காய
பத்துத்தரம் உலகுதித்தோன்
பத்து ரதன் மகன் ஆன கதை
பத்துமலைக் குகை சொல்லும் சுதை - சமய
பற்றுதலை அது சாற்றும் பறை

பத்துமலை தைப்பூசம் - அந்நாள் மேல்
பத்தர்க்கு ஒரு தனி பாசம்
பால்  முதல் சந்தனம் வரை
மண்மணக்கும்  வாசம்
அன்று மட்டும் விண்ணை முட்டும்
வேல் வேல் எனும் கோசம்
தீவினைகள் அங்காகும் நாசம் - இதுதான்
அத்தினத்தின் விசேஷம்

வரிசை வரிசை என அன்று வரும் காவடிகள்
பக்தியால் பலதலைகள் பணியும் அவன் சேவடிகள்
"அரோகரா" ! " வேல்வேல்"என ஆங்காங்கே சரவெடிகள் - அன்று
தீயவைக்கு எஞ்ஞான்றும் நிரந்தரக் கெடுபிடிகள்

குடங்குடமாய் வரும் பசும்பால்
உளம் உவப்ப ஊற்றுவர் வான் திருமேனி பால்
அப்போதவர் இன்பம் சொல்லுக்கும் அப்பால்
சாரைசாரையாய் தெண்டனிடுவர் உளத்துவப்பால்

வள்ளிக்குறத்தி தன்னைப் புனையும் வேட்டுருவ மாயன்
உள்ளில் பணிவோர்க்கு யாரினும் மேற்சிறந்த தாயன்
தெள்ளுத்தமிழை அருள் கூர்ந்தீந்த செங்கல்வராயன்
பிள்ளைக்கறி கேட்டு பிறவாவரம் தந்த செஞ்சடையான் சேயன்

தன்னில் எனை காட்டி என்னுள் தனைக்காட்டும்
தங்கத் திருத்தாள் போற்றி போற்றி
முப்பத்துமுக்கோடி தேவரும் பணிசெய்யும் மூவிருமுகங்கள் போற்றி
சகல சம்பத்து தன்னையருளும் சென்பகத்தான் பன்னிரு கரங்கள் போற்றி
உமையவள் கற்பத்து உதிக்காது, இமையவர் இந்நாளை சகிக்காது
உலகினை காத்தருளும் கந்தவேள் போற்றி
பெருமைமிகு இப்பத்து மலைவாழ் திருமுருகன் திருவருளே போற்றி போற்றி













Comments