மழை

இயற்கை இறவா வண்ணம்
இறைவன் அடிக்கடி செய்யும்
இயல்பான நீர்ப்பாசனம்

மனித இனம் மாளா வண்ணம்
மகசூல்கள் பொய்க்கா வண்ணம்
மழை என்ற வண்ணம் அடிக்கும் வானம்

கானமயில்கள் ஆடும் வண்ணம்
கரடி கூட்டம் தூங்கும் வண்ணம்
வையமிசை வந்திறங்கும் வான இசை

கட்டுக்கடங்கா கூட்டத்தை கலைக்கும் வண்ணம்
காமச்சுரம் கண்ட உயிர்கள் கலக்கும் வண்ணம்
மேகக்கூட்டத்து முட்டல் போரில் மீதமான வெள்ளை உதிரம்

உலகச் சூடு தணியும் வண்ணம்
உயிரின் பசி தணியும் வண்ணம்
உடைப்பெடுத்து நதிகள் ஓடும் வண்ணம்
உற்ற துணை உலகுக்கென உணர்த்தும் வண்ணம்
கர்ப்பிணி மேகங்களின் காலாகால பிரசவம்

பட்டை நாமம்
ஆண்டான் அடிமை
சிலுவை சுவஸ்திகம்
காவி பச்சை
இரவு பகல்
சாதி மதம்
பாமரம் பகுத்தறிவு
இவை தெரியாது மழைக்கு
இலக்கண இங்கிதம்
பழக்கமில்லை மழைக்கு

மழை
ஒழுங்கற்ற ஒழுங்கு
அழகில்லா அழகு
இரக்கமில்லா கருணை
பொறுப்பற்ற கடமை
புகழ்ச்சி வேண்டா பொறுப்பு
இகழ்ச்சி மதியா சீற்றம்
அதுதான் அதன் அழகு

அதற்கொப்ப ஒழுகுதல் உலகுக்கு அழகு
அதற்கேற்ப ஓம்புதல் மனிதத்திற்கு அழகு

Comments