திருப்பரங்குன்றம்
வளமை குன்றா குன்று பரங்குன்று
மலையில் ஆட்சியோ ஏறேறுவோன் கன்று
அத்தன் அம்மை அம்மான் அண்ணன் என
அனைவரும் ஒருங்கே பரவும் குன்று
தேவசேனையை எம்மண்ணல் மணந்த கிரி
இமையவர் அனைவரும் இருதாள் பணியும் கிரி
மந்திரமுனிகள் பலநூறு பேர் இன்னும் திரியும் கிரி
தேவசேனையொடு முனிபுங்கவரும் அண்ணல் பக்கம் நிற்கும் கிரி
அதனை வலம் வராமல் போகாது திகிரி
சங்கம் கடந்து நிற்கும் மலை - போர்
சங்கம் கடந்தும் நிற்கும் மலை - தமிழ்
சங்கம் பணிந்து நிற்கும் மலை - பிர
சங்கம் அனைத்திலும் முன்னிற்கும் மலை
சுதையாகவே எம்பெருமான் சிலை
சுதையிலும் சிதையாமல் சிரிக்கும் அவனது கலை
எம்பெருமானின் பேரழகுக்கு ஈடு இணை இலை
அவன் தாள் பணிவோர்க்கு எமன் விரிப்பானா வலை?
சங்கம் கடந்த பரங்குன்றை -
கங்கை மதி அரா கொன்றை - அணியும்
மங்கைபாக அரன்கன்றை - தொழுது
வரும் அடியார்க்கு நன்றை
பொங்கசெய்து அருள்வது என்றோ?
Comments
Post a Comment