பழனி

அதிகாலை பழனி அடிவாரம்
அரசல்புரசலாய் ஆரம்பித்தது ஆரவாரம்
மீன்கொத்திபோல் எனை பற்றினான் ஒரு பண்டாரம்
நாலாயிரம் ரூபாய்க்கு காதில் வைத்தான் செண்டாரம்

அண்ணலின் அண்ணனைத் தொழுது -ஏறினேன்
மலையை அக்காலை பொழுது
ஏறிய நேரத்தில் வல்லிசுனையிலோ பழுது
பார்க்கவிட்டத்தால் மனம் சிறிது புலம்பியது அழுது

கொஞ்சம் மனம் மாறினேன்
மறுபடியும் படி ஏறினேன்
பல்லாயிரம் முறை மனதுக்குள் வேல் வேல் எனக் கூறினேன்
என்னப்பன் அடிதொழுது அவனுக்குள் ஊறினேன்
திருக்கோவிலைச் சேர்ந்ததும் அமர்ந்து ஒருகணம் இளைப்பாறினேன்

சிறப்பு தரிசனம் - காரணம்
நாலாயிரம் ரூபாய் காட்டிய கரிசனம்
என்ன செய்ய?
அவர்கள் என்னப்பனின் பரிசனம் -
அவன் பொருட்டே எழவில்லை வெறிசினம்



போய் அமர்ந்த இடம் மூலஸ்தான படிக்கட்டு
சுற்றி அமர்ந்திருந்ததோ பென்னம்பெரிய தலைக்கட்டு
இடித்தும் இறுக்கியும் நசுக்கியும் கொடுத்தனர் இக்கட்டு
இதற்கெலாம் அஞ்சியா கட்டுவேன் சப்பைக்கட்டு

பத்தர்களுக்காக போராடிய
என்னப்பன் நீராடினான்
என் எண்ணங்களில் வேரோடினான்
என் வார்த்தையில் சீராடினான்

தண்டபாணித் தெய்வம் பாலமுருகனாய்க் காட்சி தந்தது
என் கண்ணீர் வெள்ளம் கரை புரண்டு வந்தது
முருகா முருகா இதற்கு தானா இப்பிறவியை நீ தந்தது
இப்பிறவிப் பயன் எனக்கு இப்போதே வந்தது

வழிந்தோடியது கண்ணீர் அல்ல என் நிணம் - எனை
உனக்குள் சேர்த்து விடு என்று கதறியது மனம், - நாசிக்குள்
புகுந்து நடுமண்டையில் நர்த்தனமாடியது அவன் திருநீற்று மணம்
வேறொன்றும் யோசிக்கத் தோன்றவில்லை அந்தக் கணம்

வள்ளி தேவானை எனும் இரு தாரத்தானே
என் வாழ்வின் வளத்தின் பெரும் ஆதாரத்தானே
நாயாய் நின் நாமம் புலம்புகிறேன் உன் காதாரத்தானே
தேவரும் மூவரும் தொழுது வணக்கும் பாதாரத்தானே

இந்தப் புலம்பும் நாயைக் காக்க மனமில்லையா ? இந்நாய்
முப்போதும் நின் நாமம் கூறும் இனமில்லையா? இந்நாய்க்கு
பிச்சையிட உன்னிடமே கூட தனமில்லையா? நம்பியோரைப்
பெருநலத்தோடு நீ வாழவைத்த பழங்கதைகள் முனமில்லையா?

ஒரு பழத்துக்காக நீ கோபம் கொண்டால் ஞாயம்
நான் பிடிவாதமாய் ஒன்று கேட்டால் நீ
பூசிக்கொள்வது நமட்டுச் சிரிப்பு எனும் சாயம் - நான்
வெம்பி புலம்புவதற்காகவா நீ ஆடுகிறாய் மாயம்? உனக்குமா
தெரியவில்லை புரையோடியிருக்கும் என் மனக்காயம்


உள்ளே ஏதுமின்றி கத்தும் காலிக்குடம் நான்
அஞ்ஞான இருளை அகற்றக் கூவும் குக்குடம் நீ
எஞ்ஞான்றும் எனக்குள்ள ஒரே புக்கிடம் நீ - இருப்பினும்
ஏனிப்படி என் நிலைமை கவலைக்கிடம் ?

குன்றேறிய கோவே !
வந்தெமை காவே!
வனப்புமிகு தேவே!
கொடியவர்கள் சாவே!

இப்படித்தான் தீர்த்தேன் கொட்டி - கண்டிப்பாய்
சிரித்திருப்பான் உள்ளே கைகொட்டி


முருகா.. .என்னப்பா..

நாற்று நான் நீயே என் வயல்
நீரின்றி வாழுமா நிலம் சேர்ந்த கயல்?
உனதருளின்றி வாழ்வேனா இந்தப் பயல்?
இனி எனக்கருள்கை மட்டுமே உன் செயல்

மலையேறிய கந்தா!
மதிசூடியோன் மைந்தா !
குறிஞ்சி நில வேந்தா!
குறவள்ளிக் காந்தா !
வந்தெனக்கருளுந்தா !
ஈந்தேன் எமையிந்தா !

வடித்த கண்ணீரை வழித்து நிறுத்தினேன்
மடித்த வேட்டியை வாரிச் சுருட்டினேன் - பண்டாரங்கள்
பிடித்த பிடியில் மேலும் சில நூறுகளைக் கொட்டினேன்
அடித்து பிடித்து வெளி வந்த பிறகே வேட்டியைத் திருத்தினேன்

அடுத்து நான் நின்ற இடத்தில் போகர் - நிஜத்தில்
போகத்தை அறவே மறந்த பெரும் ஞான யோகர்
நவபாஷாண முருகனை நமக்கு ஈந்த தியாகர்
முருகனுக்கு தம்மையே ஆகுதியாய் வைத்த யாகர்

மலைத்தலம் முழுவதும் நடந்து வந்ததில்
தலைக்கனம் குறைந்தது எனக்கு பலவீசம்
கொலைக்களம் சென்று மீண்ட விம்மிதம் - பன்னிரு
படைக்கலம் ஏந்திய பெம்மான் கொடுத்தான்

களைப்போடு மலையிலிருந்து இறங்கினாலும்
மலைப்போடு இருந்த மனம் மாறவில்லை
சலிப்போடு இதுவரை என்னவனைப் பற்றக் சென்றதில்லை - எனவே
திளைப்போடு போந்தேன் அடுத்த இடம் தேடி









Comments

Post a Comment