ராசராசன்

இராசராசா !

உன்னையும் எழுத சொல்லி
ஊக்கினார் ஒரு நண்பர்

எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?
நாகாஸ்திரத்தின்  வேகத்தைப் பாடமுடியுமா நத்தை ?
தாழையின் வாசனையை பாடிடுமா ஊமத்தை?
உலகாண்ட உத்தமனை எழுதிடுமா இந்த சொத்தை ?
எங்கே சொல்லி அழுவது நான் உன்மேல் கொண்ட பித்தை

தேவரே!
இருப்பினும் இந்த இறகு - உனக்காக
நினைவு சிறகை விரிக்கிறது
உன்புகழை பொட்டிக்கடை விரிக்கிறது
வைரத்தை விறகுகட்டை தரம் பிரிக்கிறது
ஆணாயிருப்பினும் மனம் உன்னை என் ஆளாய் வரிக்கிறது


சுந்தர சோழர்க்குப் பிறந்த சுந்தர வீரன்
திட்டம் போட்டு காந்தளூர் களமறுத்த தந்திரக்காரன்
முத்தமிழ் மண்டலத்தை ஒருமுடிக் கீழ் ஆண்ட அசகாய சூரன்
நினைத்ததை நினைத்த வண்ண முடித்த அரிஞ்சயர் பேரன்

உடையாரே!
மெய்கீர்த்தி உடையாரே !

" திருமகள் போல பெருநிலச் செல்வியும்"
என்றுன் மெய்கீர்த்தி படித்த போதெல்லாம்
நானும் உன்கால சோழ மக்களிடையே நின்று
உன்னை உளமார ரசித்திருக்கிறேன் தெரியுமா?


காது வரைக்கும்  வளைந்த புலி வால் மீசை
திருநீற்றை மறக்காத முன்னகல நெற்றி
பகைவனையும் பத்துநொடி திகைக்க வைக்கும் காந்தக் கண்கள்
தாம்பூலத்தையும் புன்னகையையும் ஒருங்கே தரித்த வாய்
முடிந்தால் மோதி மண்டை உடையாமல்
திரும்பி போய் பார் என்று காட்டேருமைக்கே சவால் விடும் மார்பு
பகைவரை பிடித்து இறுகியும் ஈந்து ஈந்தே சிவந்தும் போன கரங்கள்
அரசன் என்றால் இவன்தான் என இலக்கணம் சொல்லும் தேஜஸ்
அப்பப்பா ! வானத்திலிருந்து இறங்கி வந்தவன் நீ


யானையில் நீ வரும்போது,
உனக்கு யானை அம்பாரி அழகா  - இல்லை
யானை அம்பாரிக்கு நீ அழகா எனும்
பட்டிமன்றத்தில் பெண்டுகள் மயிரிழுப்பு தகராற்றை
மயிரிழையில் ஊர்பெரியதுகள் தடுக்க பார்க்கும்போது
சிரித்து கொண்டே உன் பின்னே ஓடி வந்திருக்கிறேன் நான்

உன் பின்னே உன் நிழலாய் குதிரையில் வரும்
வாணர் குலத்து வள்ளல் வந்தியத்தேவரையும்
பேரறிவாளர் பிரமராயர் கிருஷ்ணன் ராமரையும்
இராயிரத்து பல்லவரையும், பழுவேட்டரையரையும்
பரமன் மழபாடியாரையும், மூவேந்த வேளாரையும்
அக்கையார் குந்தவை நாச்சியாரையும் ,
திரிபுவன மாதேவியார் , திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியாரையும்
வணங்கியபடியே ஓடி வந்திருக்கிறேன் நான்

தெரிஞ்ச கைக்கோளர்களிடம் சவுக்கடி படாமல் இருக்க
தெரிந்த வித்தைகள் எல்லாம் காட்டியபடியே
தலை தெறிக்க பின் தொடர்ந்திருக்கிறேன் நான்

மும்முடித் தென்னவா
தமிழின நாகரீகத்தைத் தற்காத்த மன்னவா
வாநாடொறும் சிவநாமம் மட்டுமே சொன்னவா
காந்தளூர் முதல் மேலை சாளுக்கியம் வரை உள்ள
பகைமன்னவர் அனைவரையும் போர்ப்பசியில் தின்னவா
உனக்கு வாழ்ந்து செத்திருக்க வேண்டும் என்பது என்னவா ...
என்ன செய்ய, என்ன இருந்தாலும் இவை அனைத்தும் வெறும் கற்பனைதான் அல்லவா..

பொன்னியின் செல்வா,
அருள்மொழி வன்மா
மும்முடிச் சோழா
சிவபாத சேகரா
திருமுறை கண்ட சோழா
கேரளாந்தகா
தெலுங்கினக் குலகாலா
சனநாதா
நிகிரிலி சோழா
உரக்க மனதார கூவுகிறேன்
உடையார் ஸ்ரீ ராசராச தேவர்க்கு யாண்டு !
உன் புகழைப் பாடுகிறது இந்தப் பல்லில்லா பூண்டு
நீ மண்கண் மறையினும் வாழிய பல்லாண்டு பல்லாண்டு !!


 


Comments