கசவனம் பட்டி மௌன குரு நிர்வாணச் சித்தர் சமாதி





என் வேலப்பனை நான் தேடிப் போகையில்
தாண்டினேன் விண்டிவனம்
தாண்டவொட்டாமல் தடுத்தது கசவனம்
முன்னம் இவரைப் படித்ததன் சலனம்
மனதில் எழும்பியதால் திரும்பியது கவனம்
என் கவனம் திரும்பிய தருணம்
தெரிந்தது மௌனகுரு சித்தரின் பிருந்தாவனம்

ஊருக்கு ஒதுக்குபுறமாயிருந்தாலும்
உருக்கு குலையாமல் இருந்தது - அந்தச்
செருக்கு அறுத்த சித்தனின் பீடம் - முன்னம்
கிறுக்கு என்று பலர் எண்ணிய முத்தனின் இடம்

அகம்புறம் - இரண்டுமே
அவனுக்கு திகம்பரம்
சீவன் சித்தம் எல்லாமே பராபரம்
அவனுக்கு பொருட்டாயிருந்ததில்லை அண்ட சராசரம்
ஐம்புலன்களும் அவனுக்கு ராமன் துளைத்த ஏழு மராமரம்

வாசலை வணங்கி உள்ளே போந்தேன்
ஈசலைப் போல் அலை பாய்ந்த மனது - அக்கணம்
பூசலைத் தவிர்த்து அந்த புண்ணியனை உள்ளியது
கோசலை சுதன் பாணமாய் ஒரு குறியில் புள்ளியது

ஆழமனதின் அடிவரை சென்ற அந்த தாக்கம்
ஆழ்கடல் போல் அமைதியாய் பொங்கியது அடிமனதில் ஒரு ஊக்கம்
அந்த ஊக்கம் குறைத்தது மனவேதனையின் வீக்கம்
தீர்ந்தது எனக்கு ஒரு சித்தனை தரிசிக்கும் ஏக்கம்



Comments