திருநெல்வேலி
நெல்லையப்பர்
கண்ணுதல் அண்ணலுக்கும் அவர்தம் பத்தர்
உண்ணுதல் தனக்குமே தனை அடிமைசெய் பத்தர் ஒருவர்
நண்ணுதல் பொறுக்காமல் அண்ணலே நெல்கொடுத்து
விண்ணுதல் வேலியும் போட்டுக் கட்டிக் காத்த இடம்
எண்ணுதற்க் கெட்டா பெருமைமிகு நெல்வேலி தலம்
பழந்தமிழர் கட்டிடக் கலைக்கு ஒரு பறைசாற்று
சைவம் தழைத்தமைக்கு காலம் வைத்த கைசாற்று
எனக்குப்பின்னும் என் சந்ததிக்கு இருக்கும் இறைக்கூற்று
இதைப்பாடாமல் போகாது என்றும் தெற்கத்தி தமிழ்க்காற்று
நெல்லையப்பர்
பத்தரின் தொல்லைக்கு தொல்லை தரும் தொல்லையப்பர்
பாதம் பணிவார் தமக்கு சந்திரன் கண்ட முல்லையொப்பர்
கொடுப்பதிலும் கொண்டாள்வதிலும் அவருக்கு இல்லையொப்பர்
தாமிரசபையென நெல்லையை ஆட்கொண்ட தில்லையப்பர்
தட்டினேன் அவர் வாசற்கதவிலுள்ள தூண்
ஒவ்வொருதூணும் தேனென இசைத்தது ராகப்பண்
அவரழகை அருகிருந்து அள்ளி பருகினேன் யான்
அவரழகை அருகிருந்து பருகில் இப்பிறப்பு வீண்
காந்திமதி
அன்னை காந்திமதி
நெல்லையரின் சரிபாதி சதி
சிலைவடிவிலும் அவள் வற்றாமல் வழங்குவது அருள்நிதி
அவளழகில் வான்மதியும் அழகென மதிக்காது மதி
அவள் மூக்குத்தி அழகில் ஜொலிக்கின்றாள்
உலக அழகிகளைப் பார்த்து ஒருகணம் கெலிக்கின்றாள்
சேய்களை எல்லாம் அன்பால் அருகில் விளிக்கின்றாள்
பத்தர் வாழ்வில் வறுமை எனும் சொல்லை ஒழிக்கின்றாள்
அவள்
கட்டழகுப் பெட்டகம் - கொங்கைகளைப்
பார்த்து தலை குனியும் ஒட்டகம்
பல்லாயிரம் பேர் பலநூறு அட்டகம் - பாடினாலும்
தீராது, போதாது திணறும் தமிழ் வார்த்தை கட்டகம்
அள்ளியள்ளி அவளழகை பருகினேன்
தாயே என்று தாள் பணிந்து உருகினேன்
நாயெனை ஆட்கொண்ட அருள்கண்டு மருகினேன்
என்னையும் அறியாமல் கண்ணில் நீர் பெருகினேன்
ஆறுமுகம்
அஞ்சுசபையில் ஒன்றிது
தாமிரச்சபை எனும்பெயர் கொண்டது
அஞ்சுசபையான் - மகன்
அஞ்சுகரத்தனுக்கு அப்புறம்
அஞ்செழுத்தோனும் அவனில் சரிபாதி அஞ்சுகமும்
வாஞ்சையுடன் ஆறுமுகத்தை கொஞ்சுமிடம்
மூலைக்கு மூலை
வேலை நாட்டும் வேலையை
முத்தமிழோன் மூவிருமுகத்தோன் முழுவதுமாக நடத்தியிருக்கிறான்
சைவத்துக்கும் சாக்தத்துக்கும்
சரிவிகிதப் பாலம் இந்தச் சரவணம்
எப்படிப் பார்த்தாலும் கொள்ளை அழகாய் இருக்கிறான்
எப்படியில் நின்றாலும் அக்கணமே தெரிகிறான்
எப்படியும் காப்பேன் என மொழிந்து எல்லா பக்கமும் தெரிகிறான்
எப்படிப் பாடுவதென எனைத் திகைக்கவும் வைக்கிறான்
நால்வர் பாடிய தேவாரம்
திருப்புகழ் எனும் புகழாரம்
மேலும் பல தமிழ் பாவாரம் - பெருமை சால்
நெல்லையின் பெருமைக்கு ஆதாரம்

மறுபடியும் நெல்லை செல்லவேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது உங்கள் எழுத்து கண்டு.
ReplyDeleteKaanthimathikkaagave pala murai sellath thoondum.
Deleteமறுபடியும் நெல்லை செல்லவேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது உங்கள் எழுத்து கண்டு.
ReplyDelete